கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில், தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தமிழகத்தின் 13-ஆவது முதலமைச்சராக பதவியேற்றதைத் தொடர்ந்து, கட்சித் தொண்டர்கள் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி வெகுவிமரிசையாக கொண்டாடினர்.
2026 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றி கழகம் 107 தொகுதிகளில் வெற்றி பெற்று மாநிலத்தின் மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்தது. ஆட்சி அமைக்க தேவையான 118 இடங்களை எட்டுவதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சி, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் ஆதரவு அளித்தன. இதையடுத்து, தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் இன்று சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற விழாவில் தமிழகத்தின் 13-ஆவது முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.
இந்த மகிழ்ச்சித் தகவல் வெளியாகியவுடன், கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் திரண்டு உற்சாகக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். பேருந்து நிலைய வளாகத்தில் பட்டாசுகள் வெடித்து, பொதுமக்கள் மற்றும் பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கினர்.
மேலும், “முதல்வர் விஜய் வாழ்க”, “தமிழக வெற்றி கழகம் வாழ்க” என்ற முழக்கங்களை எழுப்பிய தொண்டர்கள் விசில் அடித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பேருந்தில் பயணம் செய்த பலரும் இந்த கொண்டாட்டத்தை ஆவலுடன் கண்டு ரசித்தனர்.
தொடர்ந்து, உளுந்தூர்பேட்டை தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணிமனை வளாகத்திலும் கட்சித் தொண்டர்கள் ஒன்று கூடி பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். அங்கு கட்சிக் கொடிகள் ஏந்திய தொண்டர்கள் ஆட்டம் கொண்டாட்டத்தை மேலும் சிறப்பித்தனர்.
உளுந்தூர்பேட்டை மட்டுமின்றி, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்றதை வரவேற்று உற்சாகமாக கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்றதைத் தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் உற்சாகம் நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.
D.செல்வம்
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்தியாளர்
தமிழக குரல்.

No comments:
Post a Comment